Gowthama Ashram
கௌதம ஆசிரமம்
கௌதம ஆசிரமம், அதுதான் எனக்கு கொடுக்கப்பட்ட பெயர். நான் 1862 ல், திருவல்லிக்கேணி, சென்னையில், ஸ்ரீ அருள்மிகு பார்த்தசாரதி கோவில் வாசலில் பிறந்தேன். நான் ஒரு சாதாரண கல்லும் மண்ணும் சேர்த்து கட்டப்பட்ட வீடல்ல. என் ஒவ்வொரு மூலையிலும் சுதந்திர போராட்டத்தின் தியாக தீபங்கள் ஏற்றிவைத்த விளக்குடன் அவர்களின் வீர ஒலி கேட்டுக் கொண்டே இருக்கும். என்னிடம் வந்து தங்கியவர்கள் பெயர் பட்டியல் மகாத்மா காந்தி மற்றும் கஸ்தூரிபா காந்தியிலிருந்து தொடங்கும். அவர்கள் இங்கு மூன்று நாள் தங்கி இருக்கிறார்கள். இங்கு நடந்துகொண்டிருந்த இந்தி வகுப்பில் தேவதாஸ் காந்தி இந்தி கற்றுக் கொடுதிருக்கிறார். சரோஜினி நாயுடு இங்கு வந்து ‘வந்தே மாதரம்’ பாடி இருக்கிறார். இந்த திருவல்லிக்கேணியில் வேறெந்த வீட்டிற்கும் இல்லாத மதிப்பு எனக்கு இருக்கிறது. இது போராட்ட வீரர்களின் தியாகத்தை கயிறாக திரித்து, அவர்களின் சுதந்திர வேட்கையை நெய்யாக ஊற்றி, அதை ஒரு மாத இதழால் விளக்காக ஏற்றி நாட்டு மக்கள் அனைவரையும் அந்த ஒளியின் மூலம் ஊக்குவித்த வீரர்களின் காலடி பட்டதால் கிடைத்த மதிப்பாகும்.
சுப்பிரமண்ய பாரதியார் என் மடியில் அமர்ந்து கவிதை எழுதினர். அவர் மிக அழகாகப் பாடுவார். அதை எல்லோருக்கும் முன் நான் கேட்டிருக்கிறேன். மண்டயம் ஸ்ரீனிவாசாச்சாரியார் இந்தியா என்று ஒரு தமிழ் பத்திரிக்கையும், பால பாரத் என்ற ஆங்கிலப் பத்திரிக்கையும் இங்கிருந்துதான் வெளியிட்டார். பாரதியார் அவைகளுக்கு ஆசிரியராக இருந்தார். பாரதியார் வ. உ. சி. யை இங்குதான் முதல் முதலாக சந்தித்தார். ஸ்ரீனிவாசாச்சாரியின் மகள் யதுகிரி பாரதியாரை பாடத் தூண்டுவார். அந்த பாடல்களை பிரிட்டிஷரின் கழுகுப் பார்வையில் இருந்து காப்பாற்றி தன் பள்ளிக்கூட நோட்டுப் புத்தகத்தில் எழுதி ஒளித்து வைத்திருப்பார். அதனால்தான் பாரதியாரின் 101வது பிறந்தநாள் விழாவும் என் பார்வையிலேயே நடந்தது. பாரதியாரின் பேத்தி லலிதாவும், அவருடைய கொள்ளுப்பேரன் ராஜ்குமாரும் அந்த விழாவில் கலந்து கொண்ட போது நான் பெருமையால் பூரித்துவிட்டேன்.
என்னை இந்திய சுதந்திர இயக்கத்தின் பாசறை என்பார்கள். பாரதியின் "இந்தியா" பத்திரிகை அலுவலகமாகவும், வ. உ. சி. கப்பல் கம்பெனி துவக்கத் தலமாகவும் சுதந்தர இயக்க ஆலோசனை மன்றமான சென்னை மகா ஜன சங்க இருப்பிடமாகவும் விளங்கிய நான் சுவாமி சச்சிதானந்தராக சென்னை வந்தவர் சுவாமி விவேகானந்தராக சிகாகோ போனதை பார்த்திருக்கிறேன். விவேகானந்தர் சிகாகோவில் சொற்பொழிவு நடத்துவதற்கு முன்பே என் முற்றத்தில் அமர்ந்து தன் கருத்துகளைப் பகிர்ந்திருக்கிறார். இவ்வளுவுதான் என்று நினைக்காதீர்கள். அரவிந்தர் பாண்டிச்சேரியில் ஆசிரமம் அமைப்பதற்கு முன் அவருக்கு அடைக்கலம் கொடுக்கும் பாக்கியமும் எனக்கு கிடைத்தது. அவரை பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து காப்பாற்றி பாண்டிச்சேரியில் அவருக்கு தங்க இடம் ஏற்பாடு செய்தது ஸ்ரீனிவாசாச்சாரியார் தான். வ. உ. சி. கப்பலோட்டிய தமிழன் என்று பேரெடுக்கு முன் நான் அவருடன் உறவாடி இருக்கிறேன். அவருக்கு தன் 2500 கிரௌண்ட் நிலத்தை அடமானம் வைத்து கடன் கொடுத்தவர் ஸ்ரீனிவாசாச்சாரியார். கப்பல் கம்பெனி கவிழ்ந்த பொது அந்த நிலமும் மூழ்கிவிட்டது.
யோகி பார்த்தசாரதி ஐயங்கார் வேதாந்தத்தின் சிறந்த அறிஞராக இருந்தார், மேலும் வேதாந்தத்தின் உலகளாவிய பிரச்சாரத்தைத் இங்கிருந்துதான் தொடங்கினார். உலக மதப் பாராளுமன்றத்தில் இந்து மதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த யாரையாவது பரிந்துரைக்குமாறு மில்லரிடம் கேட்கப்பட்டபோது, தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் புலமை பெற்ற யோகி பார்த்தசாரதி ஐயங்காரை அவர் பரிந்துரைத்தார். ஆனால், மரபுவழி காரணங்களுக்காக யோகி பார்த்தசாரதி ஐயங்கார் கடலைக் கடக்க மறுத்துவிட்டார். பிறகு இவருடைய உறவினர் அழசிங்க பெருமாள் விவேகானதருக்கு சிகாகோ செல்வதற்கு பண உதவி செய்து, அவர் வெளிநாட்டில் இருக்கும்பொழுதும் பணம் அனுப்பி உதவினார்.
1862 ல் ஆரம்பித்து 163 வருடங்களுக்கு பிறகும் ஆற்காட்டு நவாபால் கொடுக்கப்பட்ட தூண்கள் என்னிடம் அழகாகப் பொருத்தப் பட்டிருக்கின்றன. இங்கு வந்து தங்கிய சுதந்திர போராட்ட வீரர்களின் கைத்தடிகளும், பாதுகைகளும், இந்தியா பத்திரிகையின் அரிய முதல் இதழ்களும் இன்றும் ஸ்ரீ நரசிம்மன் அவர்கள் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார். எனக்கு ஒரு புது உருவம் கொடுத்து மெருகேற்றிய அவர் என் ஒவ்வொரு அறையையும் அந்த பழங்கால நினைவுச் சின்னங்களால் நிரப்பி இருக்கிறார். பல மகான்களின் பாதத் துளியால் பவித்ரம் அடைந்த நான், தேர் உத்சவங்களின் பொழுது ஶ்ரீ பார்த்தசாரதி மற்றும் ஶ்ரீ நரசிம்மர் பெருமாள் என் முற்றத்தில் நான்கு சுற்று வரும் பாக்கியத்தையும் பெற்றிருக்கிறேன்.
Translation
Gowthama Ashram
Gouthama Ashram—that is the name given to me. I was born in 1862, at the entrance of Sri Parthasarathy Temple in Thiruvallikeni, Chennai. I am not just a house built of brick and mud. In every corner of me, the lamps lit by the flames of sacrifice of the freedom struggle still burn, echoing with their courageous voices.
Those who stayed within me began with none other than Mahatma Gandhi and Kasturba Gandhi, who spent three days here. In the Hindi classes conducted within my walls, Devadas Gandhi taught Hindi. Sarojini Naidu once came here and sang “Vande Mataram.” Among all the houses in Thiruvallikeni, I hold an honor that none else possesses.
This glory came to me because the freedom fighters twisted their sacrifices into rope, poured their yearning for independence like oil, and lit it as a flame through a magazine—spreading light across the nation to inspire all.
Subramania Bharati sat upon my lap and wrote poetry. He sang beautifully, and I have heard his voice before everyone. Mandayam Srinivasachari published the Tamil journal India and the English journal Bala Bharat from here, with Bharati as the editor. Bharati first met V. O. Chidambaram Pillai (V.O.C.) within my walls. Srinivasachari’s daughter, Yadugiri, encouraged Bharati to sing. She secretly wrote down his songs in her school notebooks, hiding them from the hawk-like eyes of the British.
That is why Bharati’s 101st birth anniversary celebration took place here, where I proudly witnessed the participation of Bharati’s granddaughter Lalitha and his great-grandson Rajkumar.
They call me the cradle of India’s freedom movement. I was the office of Bharati’s India magazine, the launching place of V.O.C.’s Swadeshi shipping company, and the headquarters of the Chennai Maha Jana Sangh, a council for freedom struggle deliberations. I witnessed Swami Sachidananda arrive here in Chennai and later journey as Swami Vivekananda to Chicago. Before his great speech there, he had already shared his thoughts sitting in my courtyard.
Do not think this is all. I also had the fortune of sheltering Sri Aurobindo before he founded his ashram in Pondicherry. It was Srinivasachari who protected him from British authorities and arranged his stay at Pondicherry. Before V.O.C. earned the title Kappalottiya Tamilan (The Tamil Helmsman), he shared close ties with me. Srinivasachari mortgaged his 2,500 grounds of land to lend money to V.O.C. But when the Swadeshi shipping company collapsed under British pressure, the land too was lost.
Yogi Parthasarathi Iyengar, a great scholar of Vedanta, also began his mission of spreading Vedanta worldwide from here. When Mr. Miller was asked to recommend someone to represent Hinduism at the World Parliament of Religions, he suggested Yogi Parthasarathi Iyengar, who was fluent in Tamil, Sanskrit, Kannada, Telugu, English, and French. But due to traditional reasons, Yogi Parthasarathi Iyengar refused to cross the seas. Later, his relative, Alasinga Perumal, financially supported Vivekananda’s journey to Chicago and continued to fund him even while he was abroad.
From my beginning in 1862, even after 163 years, the pillars given to me by the Nawab of Arcot still stand splendidly. The walking sticks and sandals of freedom fighters who stayed here, and rare first editions of the India magazine, are still carefully preserved by Sri Narasimman. He gave me a renewed form, embellishing my rooms with relics of those earlier times.
Sanctified by the footsteps of many noble souls, I have also been blessed that during the car festivals (Ther Utsavam) of Sri Parthasarathy and Sri Narasimha, the divine procession encircles my courtyard four times.

